நில மோசடிகளை தடுக்கும் வகையில், வீடுமனை, நிலம் வாங்குவோர் இனிமேல் பட்டாவுடன் வரைபடத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிலத்தின் மதிப்பு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிலத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பலரிடத்தில் இருக்கும். ஒருவர் இவ்வளவுதான் நிலம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் பெருகி வரும் நிலையில், மோசடிகளும் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக அதிகமாக வருவாய் வரக்கூடிய துறையாக பதிவுத்துறை உள்ளது. பணம் நிறைய புழங்கக்கூடிய துறையாக உள்ளதால், லஞ்சம் வாங்குவோர்களும் அதிகரித்து வருகிறார்கள். போலி பட்டாவை தயாரிப்பது, பட்டா பெயர் மாற்றம் செய்வது, வாரிசு சான்றிதழ் பெறுவது, நிலத்தை அளப்பது, சாதி சான்றிதழ், சொத்து பாகப்பிரிவினை, பத்திரப்பதிவு செய்வது, உள்ளிட்ட எத்தனையோ விஷயங்களில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதற்கு அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிகொண்டு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்தவகையில் யார் வேண்டுமானாலும் எளிதாக ஆவணங்களை பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அரசின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் அனைத்து சொத்துகளுக்கான பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதாவது, இந்த இணையதளம் மூலம் வரைபடங்களை பதிவிறக்க செல்போன் எண் கொடுத்து அதில் வரும் ஓடிபி எண்களை உள்ளீடு செய்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 8 ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டு வந்தநிலையில், இனி பட்டாவுடன் வரைபடத்தையும் ஒரேநேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இப்போது உள்ள நடைமுறையின்படி, பட்டாவையும், அந்த நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாகதான் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. கொடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இனிமேல், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்துவிட்டாலே, பட்டாவுடன், அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும்.
அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட்-அவுட் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்பட்டது. எனவே அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.