எடப்பாடி அருகே மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள், கன்றுகுட்டிகள் பலியாவது தொடர் கதையாவதால், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலத்தூர் வைகுந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள். விவசாயம் செய்துவரும் இவர்கள், வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் இரவு நேரத்தில் அடைப்பது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.
இதேபோல், நேற்று முன்தினம் இரவும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து(45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து மர்ம விலங்கு, அங்கு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்த மாரிமுத்து செம்மறி ஆடு உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இரவு நேரங்களில் கால்நடைகளை தொடந்து வேட்டையாடி வரும் மர்ம விலங்கை வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.