எடப்பாடி அருகே ரெட்டிப்பட்டி அரசுப் பள்ளியில், கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. மேலதாளங்கள் முழங்க பெற்றோர்கள் ஊர்வலமாக சென்று சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பள்ளி தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும், ‘ஸ்மார்ட்’ வகுப்பு கொண்ட பள்ளியாகவும் உள்ளது. இங்கு பள்ளியில் ஆண்டுதோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கற்க தேவையான பொருட்களை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள். அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதற்காக குரும்பப்பட்டியில் இருந்து ரெட்டிப்பட்டி வரை, மேள, தாளம் முழங்க, திருவிழா ஊர்வலம் போன்று , 3 கி.மீ., நடந்து சென்று கல்வி சீர்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர். 3 டிராக்டர்களில், மாணவ, மாணவியருக்கு தேவையான டிபன் பாக்ஸ், மர டேபிள், சேர், சிலேட், பேனா, விளையாட்டு பொருட்கள், ஸ்மார்ட் போர்டு, குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.