காதலனுடன் உல்லாசமாக இருந்து பெற்றெடுத்த பிஞ்சு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள களியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் செங்கல்பட்டு பகுதியில் தங்கி செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திண்டிவனத்தைச் சேர்ந்த வாலிபருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். வயிறு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஜர்கின் போட்டு இத்தனை நாட்கள் மறைத்து வைத்து வந்துள்ளார். இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை திட்டியுள்ளனர். அப்பெண்ணிடம் விசாரித்தப்போது, காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு இளம்பெண் மாயமாகியுள்ளார்.
பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாலாஜாபாத்தில் தலைமறைவாக இருந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், தனக்கு பிறந்த குழந்தையை வள்ளுவபாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி கொன்றதை ஒப்புக்கொண்ட இளம்பெண், குழந்தை வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியுள்ளார். மேலும் விசாரணையில் தனது 16 வயது சகோதரியின் அடையாள அட்டையை காண்பித்து ஏமாற்றி மருத்துவமனையில் சேர்ந்ததும் அம்பலமானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.