கொரோனாவில் பிள்ளைகளை இழந்த துக்கம் கூட மறையாமல், திருப்பதி வந்து மனைவியையும் இழந்துவிட்டேன் என்று நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருக்கும் டோக்கன்களை வாங்க நேற்று மதியம் முதலே கவுன்டர்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேரம் கடந்து செல்ல செல்ல முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நுழைய முயன்றதால் கவுன்டர்கள் முன்பு கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பலியான சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவின் கணவர் கிருஷ்ணன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். “மதியம் 3.15 மணிக்கு வந்தோம். மாலை 6 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் எனக் கூறினார்கள். அந்த இடத்திற்குச் சென்றோம். 6 மணியளவில் கூட்டம் அதிகமாகி, ஓடியதில் கீழே போட்டு மிதித்துவிட்டனர். அதில் இடுப்பு ஒடிந்து உயிரிழந்துவிட்டார். சேலம் மேச்சேரியில் இருந்து 10 பேர் வந்தோம். இப்ப இங்க நான் மட்டும் தான் இருக்கேன். எல்லாம் விட்டுட்டு போயிட்டாங்க. இங்கு வந்து மனைவியை இழந்துவிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியல.. கொரோனா வந்து பிள்ளைகளை இழந்துவிட்டோம். இப்போது மனைவியையும் இழந்துவிட்டேன்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

Readmore: லாரியும் பேருந்தும் மோதி பயங்கர விபத்து!. 4 பேர் பலி!. மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்!