இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதலமைச்சர் குறித்த தரவுகள் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அறிக்கையின்படி இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்றும், மிகவும் ஏழ்மையான முதல்வர் மம்தா பானர்ஜி என்றும் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மொத்தம் ரூ.931 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ.15 லட்சம் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகக் குறைந்த செல்வந்தர் என்ற பெருமையை மம்தா பானர்ஜி பெற்றுள்ளார்.

மாநில சட்டமன்றம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 31 முதலமைச்சர்கள் சொத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 31 முதலமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி ஆகும். அவர்களில் இருவர் (6%) கோடீஸ்வரர்கள் ஆவர். 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஒரு முதலமைச்சரின் சராசரி வருமானத்திற்கும் இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானத்திற்கும் (NNI) இடையே உள்ள ஏற்றத்தாழ்வை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2023-2024-ல் இந்தியாவின் தனி நபர் வருமானம் தோராயமாக ரூ.1,85,854 எனவும், ​​ஒரு முதலமைச்சரின் சராசரி வருமானம் ரூ.13,64,310 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் சராசரியை விட 7.3 மடங்கு அதிகம். பணக்கார முதலமைச்சர்களில் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடியுடன் முதலிடத்திலும், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு ரூ.332 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ரூ.51 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ (ரூ. 46 கோடி), மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் (ரூ. 42 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் மம்தா பானர்ஜி ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துக்களுடன் ஏழ்மையான முதலமைச்சராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா (ரூ. 55 லட்சம்), கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் (ரூ. 1.18 கோடி), டெல்லி முதலமைச்சர் அதிஷி (ரூ. 1.41 கோடி), ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா (ரூ. 1.46 கோடி) ஆகியோர் உள்ளனர்.

அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ளார். இவருக்கு எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.அதேபோல், புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார்.

Readmore: புத்தாண்டு கொண்டாட்டம்..!! சேலம் மாநகரில் அதிரடி கட்டுப்பாடு..!! மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு தடை..!!