காதல் விவகாரத்தில் பரங்கிமலை ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கி சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா (20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யபிரியாவை கொலை செய்தார். இதையடுத்து சதீஷை கைது செய்த சிபிசிஐடி போலீசார், தொடர்ந்து விசாரித்து வந்த வந்தனர். தொடர்ந்து இதன் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு நடைபெற்று வந்தது. மொத்தம் 70 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம் சதீஷை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு விவரங்களை தள்ளி வைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீதேவி, குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் சதீஷ்க்கு, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகு, கொலை வழக்கின் கீழ் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.