சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் அரசு மாதிரி பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், அங்கு இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு சில இளைஞர்கள் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, சேலம் தெற்கு மாவட்ட பாமகவின் ஊடக பிரிவு தலைவர் மோகன் கூறுகையில், ”மாணவிகள் பள்ளிக்கு செல்லும் சாலையில் சில இளைஞர்கள், விலை உயர்ந்த பைக்கில் அதிவேகமாக வருகின்றனர். அப்போது, ‘வீலிங்’ செய்து சாகசத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், அரசு மாதிரி பள்ளிக்கு சில மாணவர்கள் விதியை மீறி இருசக்கர வாகனத்தில் வருவதால், அதுவும், 3, 4 பேர் அமர்ந்து செல்வதால் சில நேரங்களில் விபத்திலும் சிக்கியுள்ளனர்.
வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கும்பலாக வந்து மாணவிகளை கேலி செய்கின்றனர். மேலும், டீக்கடைகள் முன் நின்று கொண்டு, மொபைல் போனில், ‘செல்ஃபி’ எடுக்கின்றனர். அவர்களை கண்டித்தால் கும்பலாக சேர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகாரளித்தால், 2 நாட்கள் ரோந்து வருகின்றனர். பின்னர், அதை கண்டுகொள்வதே இல்லை. எனவே, போலீசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.