சேலத்தில் இருவேறு பகுதிகளை சேர்ந்த 2 பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டை நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் லாவண்யா (22). பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த லாவண்யாவின் நடவடிக்கையில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது தந்தை பாபு, அவரை கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த லாவண்யா, நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு, இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லாவண்யாவை தேடி வருகின்றனர்.
இதேபோல், சேலம் ரெட்டிப்பட்டி பைபாஸ் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வினோதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்த வினோதா, அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் கடையிலிருந்து வெளியே சென்ற வினோதா, அதன்பின்னர் மாயமானார். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.