மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று வழங்கினார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக காயமடைந்து மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை நிலக்கரி சுமைப்பான் ஒன்று எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் காயமடைந்த 5 பேர் உடனடியாக மீட்டு முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, சுற்றுலா அமைச்சரும், சேலம் மாவட்ட ஆட்சியரும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணமாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.