சின்னசேலம் அருகே சிலைகளை சுத்தம் செய்யும் திரவியத்தை தீர்த்தம் என நினைத்து குடித்த சாமியார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த அம்மகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரிடம் சென்னையைச் சேர்ந்த முரளி என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன் தான் சாமியார் என் கூறி அவரது வீட்டின் ஒரு பகுதியில் கோயில் கட்டி அவர்களுடன் வசித்து வந்துள்ளார். நாளடைவில் அவரை நோக்கி அப்பகுதியைச் சேர்ந்த பலர் வந்து செல்ல, இதனை பயன்படுத்திக்கொண்ட முரளி கோயிலுக்கு வருவோரிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் கணேசனுக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப் படுகிறது.

இதனிடையே, முரளிக்கு கடன் கொடுத்த நபர்கள் பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு கணேசனுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் முரளி, சாமி வந்ததாகக் கூறி, கணேசன் குடும்ப உறுப்பினர்களை எழுப்பி, அவர்களுக்குத் தெரியாமலேயே சாமி தீர்த்தம் எனக் கூறி திரவம் ஒன்றை கொடுத்துவிட்டு, தானும் அருந்தி மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மயக்கமைடைந்தவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அனைவரும் மேல் சிகிச்சைக்காக உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனையில், சிலைகளை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தை தண்ணீரில் கலந்துகொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், வாங்கியக் கடனை ஏமாற்றுவதற்காகவா அருந்தினார்களா ? அல்லது முரளி, கணேசன் குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தாரா ? என்ற கோணங்களில் முரளியிடம் சின்னசேலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: உஷார்!. அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்!. பீதியில் மக்கள்!