சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம். மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்கத் தவறியதாக தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* அதிக வரி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம்.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற வலியுறுத்தியும் தீர்மானம்.
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* பார்முலா 4 பந்தயம், கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க தீர்மானம்.
* குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழ்நாட்டிற்கான நிதியை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம்.
* இஸ்லாமிய சிறைக்கைதிகளின் விடுதலைக்கு எந்த முயற்சியும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* பரம்பிகுளம் – ஆழியாறு, கோதாவரி – காவிரி, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* 2026ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்றும் எம்.ஜி.ஆர். ஜானகி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.