கனமழை காரணமாக, சரபங்கா ஆற்று நீர் சாலையில் புகுந்ததால், எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பரிசல் சென்று வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நீர்நிலைகளில் இருந்தும் நீர் வெளியேறின. அந்தவகையில் சரபங்கா ஆற்றில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், எடப்பாடியில் இருந்து, குமாரபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையான, செட்டிப்பட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அதிகளவில் தண்ணீர் புகுந்தது.
4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியதால் அந்த வழியே அனைத்து வகை வாகனங்கள் செல்லவும், வருவாய்த்துறையினர் தடை விதித்தனர். பள்ளி, கல்லுாரி பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மாநில நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால், 5கி.மீ., சுற்றிச்செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
அதேபோல், செட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலையோர மளிகை கடை உள்ளிட்டவைகளிலும் நீர் புகுந்தது. இதனால், பால் வாங்குவதற்காக மக்கள் பரிசலில் சென்று வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நீரை வருவாய்த் துறையினர், காவல் துறையினர் அகற்றி சீர் செய்து வருகின்றனர்.