சேலம் புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கிய ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான புத்தக திருவிழா சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கடந்த நவ.29ம் தேதி தொடங்கியது. இதில், 200-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கும் புத்தகத் திருவிழாவானது, இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில், தினந்தினம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
இந்தநிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆங்காங்கே வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தவகையில், கடந்த 2ம் தேதி புத்தகத் திருவிழாவுக்காக எலக்ட்ரீஷியனாக வேலை செய்வதற்காக வந்த திருப்பத்தூர் மாவட்டம், ஏரிக்கொடியைச் சேர்ந்த கலீம் (56) என்பவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணையில், “கடந்த சில நாட்களாக தொடர் மழைபெய்து வருவதால் சம்பவத்தன்று இரவு கலீம் கலைஞர் அரங்கங்கத்திற்கு பின் புறம் சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை தெரியாமல் மிதித்துள்ளார். அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்றனர்.
சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறியதாவது, மழையின் காரணமாக மின்சாரம் பழுதுப்பார்க்கச் சென்ற போதுதான் சம்பந்தப்பட்ட நபர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அதிகாரிகளிடம் கூறி மின்சாரம் செல்லக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
Readmore: சேலம்- ஏற்காடு சாலை சீரமைப்பு!. வாகனங்கள் செல்ல அனுமதி!. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!