கர்நாடகாவில் பலூன் ஊதியபோது வெடித்ததில் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகா, ஜோகனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண பெல்காம்வகர். இவரின் மகன் நவீன் நாராயணன். 13 வயதான சிறுவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் பலூனை ஊதி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பலூன் திடீரென வெடித்து சிதறிய நிலையில், அது சிறுவனின் சுவாச பாதையில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை, உடனடியாக மீட்ட பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டிருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.