40 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் திருவண்ணாமலையில் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் 6 நாட்கள் போக்கு காட்டி கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையம் தனியார் அமைப்பு கருத்துகளை உள்வாங்கி தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்கள்.
சென்னையில் 13 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே ஸ்தம்பித்தது. ஆனால் இம்முறை சில மணி நேரங்களில் வடிந்தது என்றால் முதல்வர் நடவடிக்கைகள் தான் காரணமாகும். இப்புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட திருவண்ணாமலை எ.வ.வேலு, செந்தில் பாலாஜி விழுப்புரம் சிவசங்கர் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு முத்துச்சாமி, இராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளனர். முதல்வர் ஆய்வு செல்லும் போது பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்தார். துணை முதல்வர் அவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களத்தில் நின்று போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்.
2000 கோடி நிவாரணம் ஒன்றிய அரசு வழங்க வேண்டுமென்றார். தமிழகத்தை காக்கும் கடவுளாக இருக்கிறார் முதல்வர். சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார். அவர் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். சென்னையில் பல உயிர்கள் பலியானது பல வீடுகள் சேமடைந்ததை அவர் நினைவு கூறவேண்டும். முன் அறிவிப்போடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய திராவிட மாடல் அரசிற்கு நன்றி தான் அவர் கூறியிருக்க வேண்டும் ஆனால் குறை சொல்கிறார். ஆனால் அண்டை மாநிலங்களும் பாராட்டும் அளவிற்கு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அம்மன் ஊர்வலங்கள் நேற்று துவங்கியது. கடந்த முறையை விட 10%-20% கூட்டம் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார் போல் கிரிவலப்பாதையில் உள்ள பாதிப்புகள் சரிச்செய்யப்படும். ஏற்கனவே தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 6-7 தேதிகளில் மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பேருந்து, இரயில், அடிப்படை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 40 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.