ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் முன்னறிவிப்பின்றி உபரிநீர் திறக்கப்பட்டதால், வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்த தற்கொலைக்கு முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கணவன் மீட்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி மனைவி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27), தனியார் வாகன ஓட்டுநரான இவரது மனைவி மோகனாம்பாள்(19). இவர் 6 மாத கர்ப்பிணி உள்ளார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மோகனாம்பாள், வசிஷ்ட நதியில் குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் ராமுவும் குதித்துள்ளார். இருப்பினும், நதியில் செல்போன் டவரை பிடித்து தத்தளித்துக் கொண்டிருந்த ராமுவை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
ஆனால், மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 2வது நாளாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.