தொடர் மழை காரணமாக 110 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரசாயன கழிவுகளால் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அணையின் வலதுகரை மற்றும் இடதுகரை உள்ளிட்ட நீர்த்தேக்கப் பகுதிகளில் பாசி படர்ந்தது போல் பச்சை நிறத்தில் தண்ணீர் காட்சியளிக்கிறது. கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், காவிரியில் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் தண்ணீர் நிறமாறி உள்ளதாகவும், அதன் விளைவாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், மீனவர்களும், கரையோர மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும், நீர்த்தேக்கப் பகுதிகளில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் உரத்தின் காரணமாக, தண்ணீரில் பாசி படர்ந்தது போல காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இதனால், தங்கமாபுரிபட்டினம் மற்றும் கவிபுரம், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் அணை நீர்த்தேக்க பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் தேங்கும் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இன்று நீர்வளத்துறையினர் படகு மற்றும் பரிசல் மூலமாக திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி திரவ கலவையை தெளித்து துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வருகிறனர். பச்சை நிற படலம் உள்ள பகுதியில் 3 நாட்கள் தெளிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: ஈரோட்டில் அதிர்ச்சி!. துப்பாக்கிச் சூட்டில் தந்தை பலி!. மகன்கள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!