அதிமுக ஆட்சிக்காலத்தில் பதவியை பயன்படுத்தி மாமூல் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த சேலத்தை சேர்ந்த தந்தை, மகனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நாவல்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (36). இவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சென்னகிருஷ்ணன் சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்தார். பூபாலன், கடந்த 2017ம் ஆண்டு அரசு பணியில் உதவியாளராக (ஓஏ) சேர்ந்தார். அவரது சம்பளம் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது. ஆனால் 2022ம் ஆண்டு வரை அவரது சொத்துக்களை கணக்கிட்டபோது வருமானத்திற்கு அதிகமாக 1,188 சதவீதம் உயர்ந்தது தெரியவந்தது.
இந்நிலையில் பூபாலன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது தந்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்ததால் மாமூல் அதிகளவு கிடைத்ததாக கூறப்படுகிறது. கிளை மேலாளர்கள், இன்ஜினியர்கள், கண்டக்டர்கள், டிரைவர்கள் இடமாறுதல், போக்குவரத்து ரூட்டுக்கு பணம் என அதிகளவில் குவிந்துள்ளது. இதனால் மகன் பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபாலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.