திருச்செங்கோட்டில் எல்.எல்.ஆர்., லைசென்ஸ் கொடுக்க லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரையடுத்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சோதனை செய்ததில் கட்டுக்கட்டா பணம் சிக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்செங்கோட்டில், ஈரோடு சாலை, வரகூராம்பட்டியில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்களுக்கு எல்.எல்.ஆர்., லைசென்ஸ் புதுப்பித்தல், புது லைசென்ஸ் விண்ணப்பித்தல் பணிகள் நடக்கின்றன. இதற்காக லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவல்படி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணனிடமிருந்து, ரூ. 10,400, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாமாபிரியாவிடம் ரூ.9,450, ‘எல்காட்’ போட்டோகிராபர் பஷீர் அகமதுவிடம் ரூ.71,150, புரோக்கர்கள், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் இருந்து, ரூ.61,900 என, ஒரு லட்சத்து, 42,500 ரூபாய், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: ‘திமுகவை விஜய் எதிர்ப்பது தான் சரி’!. அப்போதான் ஹீரோ ஆகமுடியும்!. நடிகர் பார்த்திபன் விளாசல்!