புதுவையில் கொரோனா காலத்தின் போது சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை அரசு உயர்த்தியது. இயக்குநர் பாக்யராஜ் , முதல்வரை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி நாளொன்றுக்கு சினிமா படப்பிடிப்பிற்கு 22 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாயாகவும் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்து முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை சென்ற இயக்குநரும் ,நடிகருமான பார்த்திபன், புதுவை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் கூறுகையில், தனுஷ்- நயன்தாரா மோதல் என்பது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பது போன்று ஆர்வமாக இருந்தது. சினிமா துறையில் விவாகரத்து அதிக அளவில் பெருகி வருவதற்கு விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ரகுமான் உலகில் மிகச் சிறந்த மனிதர். அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுப்படுத்தி இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் மாநாடு பிரமாதமாக நடந்தது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆளும் கட்சியான திமுகவை விஜய் எதிர்ப்பதுதான் சரியான விஷயம்.
எம்ஜிஆர் போன்றோர் ஆளும் கட்சியை எதிர்த்துதானே அரசியல் செய்துள்ளார்கள். எனவே ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் கதாநாயகனாக வர முடியும். சினிமாவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. எப்போதும் ஆண்கள்தான் பலவீனமானவர்கள், பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள்தான். பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அவர்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.
Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. கணவருடன் தகராறு!. 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தற்கொலை!