எடப்பாடி அருகே தியேட்டர் வாசலில் குட்கா பாக்கெட்டுகளுடன் மயங்கிய நிலையில், சிறுவர்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில் குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தாண்டி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. இதில் சொல்லிக் கொள்ளும்படியான ‘கூல் லிப்’, ’ஹான்ஸ்’ போதைப்பொருள் பழக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு தடை விதித்தும், கூல் லிப் உள்ளிட்ட போதை பொருள்கள் சட்டவிரோதமான முறையில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் வாசலில் குட்கா பாக்கெட்டுகளுடன் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, 3 சிறுவர்களையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரித்ததில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சிறுவர்கள் தேவா, ராகவா, வினோத் என்பதும், பெற்றோர்களுக்கு தெரியாமல் சினிமா பார்க்க வந்து, திரையரங்க வாசலில் மயங்கிய நிலையில் படுத்துறங்கியதும் தெரியவந்தது. சிறுவர்களின் ஆடைகளில் குட்கா பாக்கெட்டுகள், தீப்பெட்டிகள் இருந்த நிலையில், போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Readmore: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!. தனி இணையதளத்தை உருவாக்குக!. தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை!