திருவள்ளூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் இருந்த 3 குழந்தை, டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டபொழுது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்-அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு 3 வயதில் வெங்கடலட்சுமி மேகலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், குழந்தை மேகலாவுக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், குழந்தைக்கு பசி ஏற்பட்டதால், பெற்றோர்கள் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடக் கொடுத்துள்ளனர். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்குன்றம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.