வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் இன்றுமுதல் 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வலுப்பெற்றது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவ.25) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, நாளை மற்றும் நாளை மறுநாள் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுச்சேரியின் காரைக்காலிலும் இன்றுமுதல் வரும் 30ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (நவ.25) மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களிலும், நாளை(நவ.26) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாளை (நவ.27) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றுமுதல் வரும் 29ம் தேதிவரை, சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.