பொதுமக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் கிரைம் மோசடி கும்பல் வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. ‘உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், ’இதை அழுத்தவும்’ என்ற ஆப்ஷன் வரும். அதை நீங்கள் அழுத்திய உடன், நீங்கள் சில ஆபாச இணையதளங்களை பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்று காண்பிக்கும். மேலும், இதற்காக உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதேபோல் ரூ.30,290 அபராதத் தொகை செலுத்தினால் இந்த தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றும் இந்த அபராதத் தொகையை கிரெடிட் கார்டுகள் மூலமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் மோசடி கும்பல் வடிவமைத்துள்ளது. அந்த கும்பல் கேட்கும் தகவல்களை உள்ளீடு செய்தால், சம்பந்தப்பட்டவரின் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டு, பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், “மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குகின்றனர். ஆனால், அதில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். போலி இணையதளங்களில் எழுத்துப் பிழை இருக்கும். இதை கவனமாக பார்க்க வேண்டும். அரசாங்க இணையதளங்கள் எப்போதும் gov.in என்று முடிவடைவதால் டொமைன் பெயரைக் கவனமாக பார்க்க வேண்டும்.

கிரெடிட் கார்டு எண், சிவிவி போன்ற விவரங்களை உள்ளிடுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். சைபர் கிரைம் மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால், 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : ரேஷன் கடைகளில் மீதியான மளிகைப் பொருட்கள்..!! குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தாதீங்க..!! ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!!