தற்போது பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதுவும் இப்போது வரும் வாட்டர் ஹீட்டர்களில் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் இருப்பதால் தண்ணீர் போதிய அளவு சூடானதும் தானாகவே அணைந்துவிடும். வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு வெந்நீர் வைத்து குளிப்பது எளிதாகிவிட்டாலும், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இது மின்சாரத்தில் இயங்குகிறது. முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால், சில ஆபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
உங்கள் வீட்டில் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் போன்ற சாதனங்கள் இருக்கிறதென்றால், நீங்கள் எந்தெந்த செயல்களை செய்யவே கூடாது..? எந்தெந்த செயல்களை கவனமாக செய்ய வேண்டும்..? என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். உங்கள் வீடு அல்லது ஹாஸ்டல் ரூம் அல்லது எந்தவிதமான இடமாக இருந்தாலும், நீங்கள் ஒரு கீஸர் சாதனத்தை பயன்படுத்த நேரிடும்போது, குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் வீட்டில் நம்பகமான ஒரு பிராண்டின் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸரை வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானது. மலிவான மற்றும் சான்று அளிக்கப்படாத ஏதோ ஒரு கீஸர் சாதனத்தை பயன்படுத்துவது ஆபத்தை நீங்களே வீட்டிற்குள் அழைப்பதற்கு சமம். நீண்ட நேரம் கீசர் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும் உடனே அதை கைவிடுங்கள். குளிக்கும்போது, உங்கள் வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸர் சாதனத்தை ON இல் வைக்கக் கூடாது.
உங்களுக்கு தேவையான வெதுவெதுப்பான நீர் கிடைத்தவுடன் கீஸரை OFF செய்ய வேண்டும். இது மின்சார பயன்பாட்டையும் குறைக்க உதவும். பாத்ரூமில் கீஸர் இருப்பதனால், நீருடன் மின்சார கசிவு எதுவும் ஏற்படாத வகையில் கீஸரை சரியான இடம் பார்த்து பொறுத்த வேண்டும். ஒவ்வொரு குளிர் காலம் துவங்கும் முன், கீஸரை சர்வீஸ் செய்வது அவசியம். இதன் மூலம், கீஸரில் இருக்கும் கோளாறுகள் துவக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்ய வசதியாக இருக்கும்.
பழுதான, அல்லது சிறிய கோளாறு உடைய எலக்ட்ரிக் கீஸர் மற்றும் வாட்டர் ஹீட்டர் சாதனங்களை பயன்படுத்தவே கூடாது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், கீஸர் ON மற்றும் OFF செய்ய அவர்களை பயன்படுத்தாதீர்கள். ஈரமான கையுடன் கீஸர் பாடி அல்லது கீஸர் ஸ்விட்ச் போன்றவற்றை தொட வேண்டாம்.