சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் மகன் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்றது பெருமையாக இருப்பதாக தாய், தந்தை நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். லாரி டிரைவரான இவருக்கு என்ற மனைவி கலைவாணி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திகேயன், சிறு வயது முதல் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு படித்து வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக பட்டப்படிப்பு முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இருப்பினும், தனது கனவை கைவிடாமல், பயிற்சி மையத்தில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார். முதற்கட்டமாக தேர்வு எழுதியதில் ரயில்வே அதிகாரியாக பணி கிடைத்தது. பணி புரிந்து கொண்டு விடாமுயற்சியுடன் படித்து வந்தநிலையில், இந்த ஆண்டு ஐபிஎஸ் கனவை நனவாக்கி உள்ளார். ஐபிஎஸ் பாஸான அவர் அடுத்த மாதம் ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு செல்ல உள்ளார். ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கார்த்திகேயனின் தந்தை அறிவழகன் கூறியதாவது, படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து முயற்சி செய்து கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். இது அவருடைய திறமை. அவர் ஐபிஎஸ்-ஆக தேர்வானது பேரூராட்சி பகுதியான எங்கள் பகுதிக்கு மட்டுமல்ல, எங்கள் மாவட்டத்திற்கே பெருமையாக உள்ளது. என் இளைய மகன் விக்னேஷ், தனது அண்ணன் படிக்க வேண்டும் என அவரும் சம்பாதித்து செலவு செய்து அண்ணனை படிக்க வைத்துள்ளார். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றார்.
தாயார் கூறியதாவது, எனது மகன் தேர்வானது சந்தோஷமாக உள்ளது. எனது கணவர் லாரி ஓட்டுனராக இருந்த போதும் எனது மகன்கள் எந்த விதத்திலும் எனக்கு தொந்தரவு கொடுத்தது கிடையாது. அதேபோல் படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அதிக நண்பர்களோடு அவர்கள் பேசியது கிடையாது. வீட்டில் டிவி பார்ப்பதும் கூட கிடையாது. எனது உறவினர்கள் உட்பட அனைவருக்கும் இது பெருமையாக உள்ளது. என் மகனை பற்றி பேசும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என ஆனந்த கண்ணீரோடு தெரிவித்தார்.
Readmore: உஷார்!. அலட்சியம் வேண்டாம்!. குழந்தைகள் விரைவில் பருவமடைய இதுதான் காரணம்!. ஆய்வில் பகீர் தகவல்!