புதிதாக 1,000 மருந்தகங்கள், கூட்டுறவுத் துறை மூலம் இந்தாண்டு ஒரு லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவ14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024 நடைபெறுகிறது. நவ.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் விழாக்களில் கூட்டுறவு தொடர்பான விழிப்புணர்வு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் நற்பயன்கள் தெரியப்படுத்தப்படுகின்றன. மேலும், சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளன.
அந்த வகையில், சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று(நவ.20) கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் புதிதாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு ரூ.86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஒரு லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வரவு, செலவு கணக்குகளை, தொடங்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.