ஆர்டர் செய்யப்பட்ட பீட்சா, பர்கரை சாப்பிட்ட கோவையை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோவை தனியார் பள்ளி மாணவி எலினா லாரேட்(15) சக பள்ளி மாணவிகளுடன் பங்கேற்றுள்ளார். போட்டி முடிந்து அனைவரும் கடந்த 15ம் தேதி ரயில் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். அப்போது மாணவி எலினாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி எலினா, உடல் பிரச்னை குறித்து அவர்களிடம் கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே நேற்று எலினா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் வரும் போது பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனைவரும் சாப்பிட்டதாகவும், அதன்பிறகு, எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகளால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: பெற்றோர்களே உஷார்..!! விளையாடிக் கொண்டிருந்தபோது தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை..!! தொண்டையில் சிக்கியதால் பரபரப்பு..!!