திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு மூன்றரை ஆண்டுகளாகியும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஓய்வூதியத் துறை இயக்குநரகம், அரசின் தரவு மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகியன கருவூலக் கணக்குத் துறையுடன் இணைப்புக்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது என ராமதாஸ் அறிக்கை வெளியியிட்டுள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குனரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகியவை கலைக்கப்பட்டு, அவற்றின் தலைமைப் பதவிகள் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஓய்வூதிய இயக்குனரகம் தான் கையாண்டு வந்தது. ஓய்வூதியர்களின் குறைகளை அறிய மாவட்டம் தோறும் குறைதீர்ப்புக் கூட்டங்களை இந்த அமைப்புத் தான் நடத்தி வந்தது. இப்போது இந்த அமைப்பு கலைக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படாது என்பது தான். அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை இது மிகவும் கசப்பான செய்தி ஆகும்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததற்கு முதன்மைக் காரணம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஆனால், இப்போது அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை திராவிட மாடல் அரசு செய்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ‘’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கு பொருள் என்ன? என்பதை 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு கற்பிப்பார்கள். இது உறுதி என ராமதாஸ் கூறியுள்ளார்.
Readmore: ஆதார் முக்கியம்!. நெருங்கியது கெடு!. செயலிழக்கும் என எச்சரிக்கை!