உங்கள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு உங்கள் பான் கார்டு செயல் இழக்கும்.
இந்திய அரசாங்கம் நாடு முழுக்க டேட்டா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இனி தனியார் நிறுவனங்களால் பான் விவரங்களை சோதனை செய்யும், ஆய்வு செய்யும் முறையை தடை செய்ய உள்ளனர். அங்கீகரிக்கப்படாத முறையில் உங்களின் பான் தகவல்களை யாரும் சோதனை செய்ய முடியாத அளவிற்கு தடை செய்ய உள்ளனர்.
முக்கியமாக பான் அட்டையில் உள்ள கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருமாறு வருமான வரித் துறைக்கு உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது. இதை எல்லாம் தடுக்கவே பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. நவம்பர் 6ம் தேதி முதல் இந்த முறை கட்டாயம் ஆகிறது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பான் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் சோதனை செய்யப்படும், அதேபோல் உங்கள் பான் கார்டை வைத்து செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும்.
நீங்கள் உங்கள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு உங்கள் பான் கார்டு செயல் இழக்கும். இப்படி இரண்டையும் இணையும் போது உங்கள் பான் கார்டை தேவையின்றி நிறுவனங்கள் எளிதாக ஆய்வு செய்ய முடியாது. இதனால் தனியார் நிறுவனங்கள் உங்கள் பான் கார்டு விவரங்களை அவ்வளவு எளிதாக சோதனை செய்து உங்களுக்கு போன் செய்ய முடியாது.
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.48 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களிடம் இருந்து மத்திய அரசு ₹600 கோடிக்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளது. இதுவரை, 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.