சங்ககிரியில் தனியார் வங்கியில் ரூ.2.45 கோடி கையாடல் செய்த வழக்கில், மேலாளர் உள்பட, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில், ‘பந்தன்’ எனும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு, மகளிர் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்கள், கடனுதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பலர் நகை, பணங்களை வங்கியில் சேமித்தும், கடன்களை பெற்றும் வந்துள்ளனர். இந்தநிலையில், வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் சேர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவியில், 2.45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக, வங்கி முதன்மை புலனாய்வு அலு-வலர் ரங்கநாதன், எஸ்.பி., கவுதம் கோயலிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முனிய-சாமி விசாரித்தார். அதில் வங்கியில் பணிபுரிந்த மேலாளர் மனோஜ்குமார் உள்பட, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் திருச்செங்கோட்டை சேர்ந்த மேலாளர் மனோஜ்-குமார், இ.புதுப்பாளையத்தை சேர்ந்த காசாளர் மல்லிகா-மணி, வேலம்மாவலசை சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக், வி.என்.பாளையம் இளங்கோ, பல்லக்காபாளையம் பிரவீன்குமார், ஆகிய, 5 பேரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திலீப்குமார், மற்றொரு பிரவீன்குமாரை, போலீசார் தேடிவருகின்றனர்.