கேரளாவில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்த அரியானா கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு போலீசார் 24 பேருக்கு கேரளா டிஜிபி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான 3 ஏடிஎம்களில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அதிகாலையில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்து தமிழ்நாடு வழியாக தப்பி செல்ல முயன்ற அரியானா கொள்ளையர்களை சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் நாமக்கல் போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். பின்னர், நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார், அக்கொள்ளையர்களை வெப்படைக்கு கொண்டுச்சென்றபோது, தப்பியோட முயன்றனர்.

அதில், கொள்ளையன் ஜூமாந்தின் (37) என்கவுன்டர் செய்யப்பட்டான். மற்றொரு கொள்ளையன் ஹஸ்ரு (எ) அஜர்அலி (28) குண்டு காயமடைந்தான். இதுபோக அரியானாவை சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன்கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய அரியானா கொள்ளையர்களை தமிழ்நாடு போலீசார் கைது செய்தது, பெரும் பாராட்டை பெற்றது.

கைதான கொள்ளையர்களிடம் கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநில போலீசார் விசாரணை நடத்தினர். இக்கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பிக்கள் ராஜா (சங்ககிரி), இமயவரம்பன் (திருச்செங்கோடு), முருகேசன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), இன்ஸ்பெக்டர்கள் தவமணி (வெப்படை), ரங்கசாமி (பள்ளிப்பாளையம்) மற்றும் எஸ்ஐக்கள், ஏட்டுகள், போலீசார் என 24 பேரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சங்கர்ஜிவால் ஆகியோர் பாராட்டினர்.

இந்நிலையில் கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு தப்பிய அரியானா கொள்ளையர்களை மிகவும் திறம்பட மடக்கி பிடித்து, கொள்ளை போன ரூ.65 லட்சம் பணத்தை மீட்ட தமிழ்நாடு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கேரளா டிஜிபி ஷேக்தர்வேஷ்சாஹேப் சான்றிதழ்களை அளித்துள்ளார். ஏடிஎம் கொள்ளை குற்ற வழக்கில், மிக விரைவாக தமிழ்நாடு காவல்துறையினர் செயல்பட்டதை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்து, நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பிக்கள் ராஜா, இமயவரம்பன், முருகேசன் உள்ளிட்ட 24 போலீசாருக்கும் தனித்தனியே சான்றிதழ்களை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். கேரளா டிஜிபியின் இப்பாராட்டு சான்றிதழ்களையும், தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவாலின் பாராட்டு சான்றிதழ்களையும் கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட 24 போலீசாருக்கும் வழங்கி பாராட்டினார்.

Readmore: அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா?. புதிய ட்விஸ்ட்!. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ விளக்கம்!.