சென்னையில் எலி மருந்து நெடியை சுவாசித்த இரு குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் கிரிதரன் (34 வயது) – பவித்ரா (31 வயது) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி (6 வயது) என்ற மகளும் சாய் சுதர்சன் (1 வயது) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில், இவர்கள் வீட்டில் எலி தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த வீட்டின் பல்வேறு இடங்களில் எலி மருந்துகளை வைத்துள்ளனர். மருந்து வைக்கப்பட்ட அறையில் நேற்றிரவு ஏ.சி. போட்டுக் கொண்டு தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மருந்தின் நெடி அதிகமாக இருந்ததால் நால்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதரனும், பவித்ராவும் போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காற்றில் பரவிய எலி மருந்தின் நெடி காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: இப்படியா நடக்கணும்!. விடிந்தால் வளைகாப்பு!. பெற்றோரை அழைத்துவர சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்!. சேலத்தில் அதிர்ச்சி!.