ஆதார் கேஒய்சி விவரங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பை பெற்று வருகிறார்கள்.
இதன்படி பிரதம மந்திரிர உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு 372 ரூபாயும், மற்றவர்களுக்கு 47 ரூபாயும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு 500 ரூபாய்க்கும் சிலிண்டர் வழங்கப்படுகிறது . அதேநேரம் இணையாத மற்றவர்களுக்கு 818.50 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு பெற்றவர்கள மற்றும் சாதாரணமாக சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவரும் இன்னும் சில வாரங்களில் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேஒய்சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கேஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பினை பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடைசி நாள் தேதியை நீட்டித்தபடியே வருகின்றன.
அதன்படி கேஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக கேஒய்சி பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் ஊரில் உங்களுக்குசமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கும் ஏஜென்சிக்கு சென்று ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்துவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று செல்போன் செயலி மூலம் முகப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேஸ் ஏஜென்சிகள் அறிவித்திருந்தன. கடந்த மே 30ஆம்தேதிக்குள் ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் சமையல் எரிவாயு இணைப்பு ரத்தாகும் என செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டது.அதற்கு பிறகு தற்போது நவம்பர் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை இணைக்கவில்லை என்றால், சிலிண்டர் இணைப்பு நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.