தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 29 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். இதில், ஆண்கள் – 3.07 கோடி, பெண்கள் – 3.19 கோடி, 3ம் பாலினத்தவர் – 8,964 பேர் அடங்குவர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்- 3.38 லட்சம் பேர், பெண்கள் – 3.37 லட்சம் பேர்,3ம் பாலினத்தவர் – 125 பேர் உள்ளனர்.
குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில்,ஆண்கள்- 85,065 பேர், பெண்கள் – 88,162 பேர்,3ம் பாலினத்தவர் – 3 பேர் உள்ளனர். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் – 14,71,774 பேர், பெண்கள் 14,89,420 பேர், 3ம் பாலினத்தவர் 319 பேர் என மொத்தம் 29, 61, 513 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பட்டியல் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒருவேளை பெயர் விடுபட்டு இருந்தால் 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 உள்ளிட்ட தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சேர்க்கலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
Readmore: புதிய வீட்டுக்கு சொத்து வரியை குறைக்க ரூ.30000 லஞ்சம்!. சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பு அலுவலர் கைது!