சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.ஆர். ராஜேந்திரன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.ஆர். ராஜேந்திரன், சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, தஞ்சை திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி, செழியன், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. சா.மு.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆளுநர் என்.ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய பிரமாணமும் செய்து வைத்தார்.
கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதேபோல், மற்ற அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, 4 பேரும் முதல்வர், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் 4 பேருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் ஆர். ராஜேந்திரனு சுற்றுலா துறையும், கோவி.செழியனுக்கு உயர்கல்வித் துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.