நாங்கள் கொண்டுவந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்துக் கொண்டிருக்கிறது திமுக. எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும் மற்றும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆளவில்லை. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை, இனி ஒருபோதும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த எவரும் ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாது.

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தார் என்ற ஒரே அடையாளத்திற்காகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று திமுக மூத்த அமைச்சர்களே சொல்லும் அளவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டனர். ஆனால் அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராகலாம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கக்கூடிய தெம்பு, திராணி அதிமுககாரனிடம் உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் மீண்டும் தூசி தட்டி விசாரிக்கப்படும். அஇஅதிமுக என்ற இயக்கம் இருக்கும்வரை இனி விடியா திமுக குடும்பத்தில் பிறந்தவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரமுடியாது.

இந்த கட்சியை முடக்க, உடைக்க பல பேர் பல அவதாரங்கள் எடுத்தார்கள். அவை அத்தனையையும் தகர்த்தெறிந்த கட்சி அஇஅதிமுக. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக. ஒரு அமைச்சர் வேட்டியை மாற்றிக் கட்டிக்கொண்டு சென்றவர், 472 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ளார். மேலிடத்திற்கு யார் அதிக கப்பம் கட்டுகிறாரோ அவர் தான் திமுகவில் சிறந்த அமைச்சர்” எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

“இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுகவில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக கட்சியல்ல; அது கார்ப்பரேட் நிறுவனம். ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார். ஆனால், தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பல ஆண்டுகளாக ஏரிகள் தூர்வரப்படாமல் இருந்தன. எங்கள் முன்னெடுப்பால்தான், தமிழ்நாடு முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டன. அதன் மூலமாக ஏரியில் இருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் சென்று பயனடைந்தனர். நாங்கள் கொண்டுவந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்துக் கொண்டிருக்கிறது திமுக. எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்துவிட்டார்? அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் ஸ்டாலின் மகன் என்பதை தவிர வேறு எதுவும் சாதனை இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்தார் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று 41 மாதங்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து ஊழல்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Readmore: தீபாவளி சிறப்புத் தொகுப்பு..!! ரூ.199, ரூ.299 விலையில் 14 வகையான மளிகைப் பொருட்கள்..!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!