சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்தூர் அருகே உள்ள சென்றாயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 33). இவர், தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு அக்சயா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு இதயத்தில் 3 துளைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை செய்ய நிதியுதவி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தம்பதிகள் இருவரும் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாய் தனலட்சுமி, “எனது குழந்தையின் இதயத்தில் 3 இடத்தில் துளைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், பண உதவி கேட்டு மனு அளித்துள்ளோம்.
அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கேட்ட நிலையில், காப்பீடுத் திட்டம் குழந்தைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதனால், உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். எனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும். முதலமைச்சர் எனது குழந்தையை காப்பாற்றி கொடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
Read More : தொடர் கனமழையால் நிரம்பியது எடப்பாடி பெரிய ஏரி..!! ஆபத்தான முறையில் கடந்து செல்லும் பொதுமக்கள்..!!