2026 தேர்தலை எதிர்நோக்கி அரசியலில் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய், நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிப்போம் என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், 45 நிமிடங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அதில், கொள்கை தலைவர்களுக்கான காரணம், எதிரிகள், எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் என பல விஷயங்களை பற்றி விளக்கமளித்தார். மேலும், தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மையும், நம் செயல்பாட்டையும் நம்பி நம்மோடு சிலபேர் வரலாம். அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருகிறவர்களை நாம் அரவணைக்க வேண்டுமல்லவா.
அதனால், நம்மை நம்பி நம்மோடு களம் காண வருகிறவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். 2026-ம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. என்னடா இந்த விஜய் யார் பெயரையும் நேரடியா சொல்ல மாட்டேங்குறான், யார் பெயரையும் அழுத்தமாக சொல்ல மாட்டேங்குறான், இவனுக்கு என்ன பயமா என்று கூறும் ஒரு சில அரசியல் விஞ்ஞானிகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால், சிலரின் பெயர்களை நான் சொல்லாமல் விட்டதற்குக் காரணம், சொல்ல தைரியம் இல்லை என்றெல்லாம் கிடையாது. அதற்கெல்லாம் ஒரே காரணம்தான், இங்கே யாருடைய பெயரையும் சொல்லி தாக்குவதற்கு நாங்கள் இங்கு வரவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து டீசண்டா அரசியல் செய்யதான் இங்கு வந்திருக்கிறோம். எங்களுடைய அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, சித்தாந்த எதிரியாக இருந்தாலும் சரி டீசன்ட் அணுகுமுறைதான், டீசன்ட் அட்டாக் தான். ஆனால், அது ஆழமாக இருக்கும்.” என்றார்.