திருப்பதி மலைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாக வர வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் பண்டிகை, பிரம்மோற்சவம், விடுமுறை நாட்களில் சொல்ல வேண்டியதில்லை. திருப்பதியில் ஆர்ஜித சேவை, ரூ 300 விரைவு தரிசனம், இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவை உள்ளன. நடைபாதை தரிசனத்தில் அலிபிரி மலை பாதை வழியாகவும், ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாகவும் சென்று திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தான், மலைபாதை வழியாக வரும் பொதுமக்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் திருப்பதி மலைக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம். மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள், இதயநோய் உள்ளவர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல.

எனவே, அவர்கள் வாகனங்கள் மூலம் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். பாத யாத்திரையாக வருவோருக்காக அலிபிரி மலைப்பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெண்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?. வட்டி இல்லாமல் ரூ. 3 லட்சம் கடன்!. உடனே விண்ணப்பியுங்கள்!