13வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை, ஓடிச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் டும்புவாலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தநிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 13 வது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை எதிர்பாராத விதமான பால்கனியின் ஓரத்தில் சிறிது நேரம் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. பின்னர், திடீரென கை நழுவி கீழே விழுந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக சென்ற வேஷ் ஹெத்ரா என்ற இளைஞர், அதை கவனித்ததால், உடனடியாக வேகமாக ஓடிச்சென்று கீழே விழுந்த அந்த குழந்தையை மீட்டார்.
குழந்தை முதலில் அவருடைய கையில் விழுந்து பின்னர் கீழே விழுந்தது. இதனால் குழந்தைக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்த நபருக்கு பலரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.