தருமபுரியில் காதல் விவகாரத்தில் குழந்தை திருமணம் நடத்தி வைத்த நிலையில், 17 வயது சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுமியும், இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியே தெரிந்த நிலையில் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிறுமியும் இளைஞரும் காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் கணவன் – மனைவியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குழந்தை திருமணம் அம்பலமானதையடுத்து பாலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.