100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து 23,64,027 பயனாளிகள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) மூலம் கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஓரளவு மக்களின் வறுமையைப் போக்கி, அன்றாட வாழ்க்கையை அவலமாக்காமல் தடுக்க உதவியது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ஆண்டு குறைத்ததால், அதற்கென இருந்த வாய்ப்புகளும் காணாமல்போனது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் கூட 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் தான், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக பீகார் மாநிலத்தில் 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் 3,36,375 பயனாளிகளும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.