கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக-கர்நாடக வன எல்லைப்பகுதியான மேட்டூர் அருகே சிறுத்தை குட்டிகளை கர்நாடக வனத்துறையினர் விட்டுச்சென்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்டத்தின் மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார மலை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனத்துறை அதிகாரிகளும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும், சிசிடிவி கேமராக்களை பொருத்தியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சிறுத்தையை பிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த 15 நாட்களாக மேட்டூர் பாலமலையை ஒட்டியிருக்கும் கொளத்தூர், குரும்பனூர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்து, இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வேட்டையாடுகிறது. மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதியில் இதுவரை 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் பகுதியில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை உள்பட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் 10 சிறுத்தைகள் சுற்றி வருவதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். மேட்டூர் அடுத்துள்ள பாலமலையில் தமிழக-கர்நாடக வன எல்லைப்பகுதியில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் விடப்பட்டவை என்றும், மேட்டூர் பகுதி மலைக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேட்டூர் பாலமலை பகுதியில், பாலாறு வழியாக கர்நாடக வனத்திற்குள் வேட்டைக்காரர்கள் ஊடுருவி, சந்தன மரங்களை வெட்டுவது, யானையை வேட்டையாடி தந்தம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க கர்நாடக வனத்துறையினர், மாநில எல்லையில் 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அந்த குட்டிகள் பெரிதாகி, தற்போது தமிழக வனத்தில் உலா வருவதோடு, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் கூறுவது போல் சிறுத்தை குட்டிகளை கர்நாடக வனத்துறையினர் கொண்டு வந்து விட்டார்களா என்பது குறித்து வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: ஆத்தூரில் ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன!. ஆட்சியர் தகவல்!